அல்லாஹ்வே எனது இரட்சகன்

அல்லாஹ் கூறுகிறான்: {மனிதர்களே! உங்களையும்உங்களுக்கு முன்பிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்.(அவ்வாறு செய்வதனால் மட்டுமே)நீங்கள் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளமுடியும்} [அல் பகரா:21].

  • அல்லாஹ் கூறுகிறான்: {அவன்தான் அல்லாஹ், உண்மையாக வணங்குவதற்குத் தகுதியானவன் அவனைத்தவிர வேறுயாறுமில்லை} [அல் ஹஷ்ர் :22].
  • அல்லாஹ் கூறுகிறான்: {எந்தப்பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை. அவன் அனைத்தையும் செவியுறுபவனும், பார்ப்பவனும் ஆவான்} [அஷ்ஷூரா :11].
  • அல்லாஹ்தான் எனதும் மற்ற அனைத்து படைப்பினங்களினதும் இரட்சகனுமாவான். அவன் (அனைத்தினதும்)அதிபதி, படைப்பாளன் ,வாழ்வாதாரத்தை தருபவன்,அனைத்து விடயங்களையும் திட்டமிடுபவன்.
  • வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் மாத்திரமே, அவனைத் தவிர இரட்சகனோ, உண்மையான கடவுளோ வேறு எவருமில்லை.
  • அவனுக்கு அழகிய திருநாமங்களும், உயர் பண்புகளும் உண்டு. அவை தனக்கு இருப்பதாக அவனும், அவனது தூதரும் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்திருநாமங்களும், பண்புகளும் அழகிலும், பரிபூரணத்தன்மையிலும் மிகைத்து நிற்கிறது. எந்தப்பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை.அவன் அனைத்தையும் செவியுறுபவனும், பார்ப்பவனும் ஆவான்.

அவனின் அழகிய திருநாமங்களில் சில:

  • (அர்ரஸ்ஸாக்) வாழ்வாதாரத்தை வழங்குபவன்
  • (அர்ரஹ்மான்) அளவற்ற அருளாளன்
  • (அல் கதீர்) சர்வ வல்லமை படைத்தவன்
  • (அல்மலிக்) அரசன்
  • (அஸ்ஸமீஉ) யாவற்றையும் செவிமடுப்பவன்
  • (அஸ்ஸலாமு) அனைத்துக் குறைகளை விட்டும் நீங்கியவன்
  • (அல்பஸீர்) யாவற்றையும் பார்ப்பவன்
  • (அல்வகீல்) பொறுப்பேற்பவன்
  • (அல் காலிக்) படைப்பாளன்
  • (அல்லதீப்) மிக நுட்பமானவன்
  • (அல் காபி) போதுமானவன்
  • "அல் கபூர் "பெரும் மன்னிப்பாளன்

* முஸ்லிம் அல்லாஹ்வின் படைப்பின் அதிசயம் குறித்தும், அவற்றிற்கான தேவைகளை அவன் இலகுபடுத்தி கொடுத்தது தொடர்பாகவும் சிந்தித்தல் வேண்டும். அவ்வாறான அதிசயங்களில் ஒன்றாக, அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரினங்கள் தமது சின்னஞ் சிறுசுகளை பாராமிரிப்பதில் கவனம் செலுத்துவது உள்ளது. குறிப்பாக அவைகள் பெரிதாகி தன்னில் தங்கி வாழும் நிலை வரும் வரையில் உணவூட்டுவதில் அவைகள் அக்கரைகாட்டுகின்றன. இவற்றைப் படைத்த அல்லாஹ் மிகத்தூய்மையானவன், மகா கருணையாளன் அச்சிறிய படைப்புகளின் பலவீனம் அறிந்து அவற்றின் நிலமைகளை சீர் செய்து, அவற்றுக்கு உதவிசெய்வதற்கான ஒழுங்குகளை தயார் செய்து வைத்திருப்பது கூட அவனின் கருணையின் வெளிப்பாடாகும்.

அல்லாஹ்வே எனது இரட்சகன்

வாழ்வாதாரத்தை வழங்குபவன் (வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுபவன்): அடியார்களின் உடலுக்கும்,உள்ளங்களுக்கும் அவசியமான வாழ்க்கைத் தேவைகளைப் பொறுப்பேற்று வழங்குபவன்.

எல்லாப் படைப்பினங்களையும் உள்ளடக்கக்கூடிய மிகப்பிரமாண்டமானதும் விசாலமிக்கதுமான அருளுக்குச் சொந்தக்காரன் என்பதாகும்.

சோர்வோ, இயலாமையோ ஏற்படாத நிறைவான வல்லமைக்குச் சொந்த

சோர்வோ, இயலாமையோ ஏற்படாத நிறைவான வல்லமைக்குச் சொந்தக்காரன்.

மேன்மை மற்றும் அடக்கியாளுதல், திட்டமிடுதல் போன்ற பண்புகளுக்குரியோன், அனைத்து விடயங்களுக்கும் சொந்தக்காரன்.அவற்றை விரும்பிய விதத்தில் கையாளுவதற்குரிய அதிகாரத்தைப் பெற்றவன் என்பது கருத்தாகும்.

னதுமான அனைத்தையும் செவிமடுப்பவன் என்பதாகும்.

அனைத்து வகையான குறைகளை விட்டும் நீங்கியவன்.

அவனது பார்வை அனைத்து விடயங்களையும் சூழ்ந்திருக்கிறது. அவை மிகத் துல்லியமான சிறிய விடயங்களாயினும் சரியே.அவன் சிருஷ்டிகள் குறித்த அகப்பார்வை மிக்கோன் அவற்றின் அந்தரங்க நுனுக்கங்கங்களை ஆழ்ந்து அறிந்தவன் என்பதாகும்.

படைப்புகளின் தேவைகளையும், அவைகளின் நலன்களையும் பாதுகாத்து பொறுப்பேற்றவன். மேலும் அவனின் நேசர்களை பொறுப்பேற்று அவர்களின் காரியங்களை இலகுபடுத்துபவன் என்பதுமாகும்.

எந்த முன்மாதிரியுமின்றி அனைத்து படைப்பினங்களையும், பொருட்களையும் நுனுக்கமாக படைப்பவன்.

தனது அடியார்களை கண்ணியப்படுத்தி, அவர்களுக்கு அருள்புரிந்து அவர்கள் கேட்பவற்றை கொடுப்பவன்.

அடியார்களுக்கு தேவையான அனைத்திற்கும் அவனே போதுமானவன். அவன் அல்லாதவர்களின் உதவியை விட்டும் தேவையற்ற தாக்குபவன், அவனிடம் மாத்திரமே சகல தேவைகளையும் பெற்றுக்கொள்ளுமளவு தன்நிறைவானவன்.

எனது (நபி) தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார். அவர் மீது சாந்தியையும் அருளையும் அல்லாஹ் பொழிவானாக

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர்; உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தையளிக்கிறது. உங்கள் விடயங்களில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்.(இன்னும்) நம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமுடையவருமாவார்} [அத்தவ்பா :128].

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {உலகத்தாருக்கு அருளாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை} [அல் அன்பியா: 107].

முஹம்மத் (ஸல்) அவர்கள் அர்ப்பணிப்பும், கருனையும் மிக்கவர்

அவரின் பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் - அவர் மீது சாந்தியையும் அருளையும் அல்லாஹ் பொழிவானாக - ஆகும். நபிமார்களிலும், இறைத்தூதர்களிலும் இறுதியானவர். மனித குலத்தார் அனைவருக்கும் இஸ்லாம் மார்கத்தின் மூலம் நன்மையான விடயங்களை அவர்களுக்கு காட்டிக்கொடுப்பதற்காக இறைத்தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர் காட்டித்தந்த நல்லவற்றில் மிகவும் உயர்வானதாக( அத்தவ்ஹீத்) ஏகத்துவம் உள்ளது. அதே போன்று தீமையிலிருந்து அவர்களை தடுப்பதற்காகவும் அவரை இறை தூதராக அனுப்பினான். அத்தீமைகளில் மிகவும் பிரதானமானதாக (அஷ்ஷிர்க)' இணைவைத்தல் உள்ளது.
அவர் ஏவிய விடயங்களுக்கு கட்டுப்பட்டு, அவர் அறிவித்த விடயங்களை உண்மைப் படுத்தி, தடுத்தவற்றைத் தவிர்ந்து நடப்பதோடு.மேலும் அவர் மார்க்கமாக காட்டித்தந்ததன் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்குதவதும் கடமையாகும்.
அவரினதும், அவருக்கு முன்னிருந்த அனைத்து நபிமார்களினதும் தூதுச் செய்தியானது; அல்லாஹ்வைமாத்திரம் வணங்கி, அவனுக்கு எந்த ஒரு இணையும் கிடையாது என்ற விடயத்தின்பால் அழைப்பு விடுப்பதாகும்.

முஹம்மத்(ஸல்) அவர்களின் பண்புகளிள் சில:

  • உண்மை பேசுதல்
  • கருணை
  • சகிப்புத்தன்மை
  • பொறுமை
  • வீரம்
  • தயாளம்
  • நற்குணம்
  • நீதி
  • பணிவு
  • மன்னித்தல் போன்றனவாகும்

 

அல் குர்ஆன் எனது இரட்சகனின் வார்த்தையாகும்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சி நிச்சயமாக உங்களிடம் வந்து விட்டது.இன்னும், மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம்} [அந்நிஸாஃ : 174].

புனித அல் குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும்.மக்களை இருளிலுருந்து ஒளியின் பால் வெளியேற்றி நேரான வழியை காட்டுவதற்காக நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கியருளினான்.
அதனை யார் ஒதுகிறாரோ அவருக்கு மகத்தான கூலி உண்டு.இன்னும் யார் அதன் வாழிகாட்டல்களை ஏற்று நடக்கிறாரோ அவர் நோரான பாதையில் செல்வார்.

(அர்கானுல் இஸ்லாம்) எனப்படும் இஸ்லாத்தின் பிரதான கடமைகளை(தூண்களை) தெரிந்து கொள்வோம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் எவறுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சான்று பகர்தல், தொழுகையை நிலை நாட்டல், ஸகாத்தை கொடுத்தல், றமழான் மாத்தில் நோன்பு நோற்றல், ஹஜ் செய்தல் போன்றனவாகும்”.
(அர்கானுல் இஸ்லாம்) இஸ்லாத்தின் தூண்கள் அல்லது அடிப்படைக்கடமைகள் என்பது; ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய வணக்கங்களாகும். இவை கட்டாயக் கடமை என்பதை ஏற்று நடை முறைப்படுத்தாதவரை ஒரு மனிதனின் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது ஏனெனில் இஸ்லாம் என்பதே இத்தூண்களில்தான் நிறுவப்பட்டுள்ளது. இதனால் தான் அர்கானுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் தூண்கள்) என்ற பெயரால் இவைகள் அழைக்கப்படுகின்றன.
இதோ அந்த அடிப்படைக் கடமைகளின் விபரம் பின்வருமாறு:

(அர்கானுல் இஸ்லாம்) எனப்படும் இஸ்லாத்தின் பிரதான கடமைகளை(தூண்களை) தெரிந்து கொள்வோம்

முதலாவது கடமை

உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவறுமில்லை என்பதை (நபியே!) நீர் அறிந்துகொள்வீராக!} [முஹம்மத் : 19].

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: {நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்.நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தையளிக்கிறது. உங்கள் விடயங்களில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார். (இன்னும்) நம்பிக்கையாளர்கள் மீது மிக்க இரக்கமும், கருணையும் உடையவராகவும் இருக்கிறார்}[அத்தவ்பா :128].

  • (லாஇலாக இல்லல்லாஹ்) என்பதன் பொருள் : அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்துக்குரிய இறைவன்(கடவுள்) வேறு எவறுமில்லை. என்பதாகும்.
  • நபி முஹம்மது (ஸல் ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்வத்தின் அர்த்தம்; அவர் ஏவிய விடயங்களில் அவருக்குக் கட்டுப்படுதல், அவர் அறிவித்த விடயங்களை உண்மைப்படுத்தல், அவர் தடுத்தவற்றை முற்றாக தவிர்ந்து கொள்வதோடு, அவர் மார்க்கமாக காட்டித்தந்ததன் அடிப்படையில் மாத்திரமே அல்லாஹ்வை வணங்குவதுமாகும்.

 

இரண்டாம் கடமை

தொழுகையை நிலை நாட்டல்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {" நீங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள்" என்று கூறுகிறான்} [அல் பகரா:183].

  • தொழுகையை நிலை நாட்டுதல் என்பது அல்லாஹ் கடமையாக்கிய முறையிலும், அவனது தூதர் எமக்கு கற்றுத்தந்த வழிமுறையிலும் இருத்தல் வேண்டும்.

 

மூன்றாம் கடமை

அல்லாஹ் கூறுகிறான்

அல்லாஹ் கூறுகிறான்: {ஸகாத்தை நிறைவேற்றுங்கள்} [அல் பகரா:183].

  • ஸகாத்தை அல்லாஹ் ஒரு முஸ்லிமின் இறைவிசுவாசத்தின் உண்மை நிலையை பரீட்சித்துப் பார்ப்பதற்கும், அவனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் செல்வத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், ஏழைகள் தேவையுடையோருக்கு உதவி செய்யவும் கடமையாக்கியுள்ளான். மேலும் ஸகாத்தை பெறத் தகுதியானவர்களுக்கு மாத்திரம் கொடுப்பதின் மூலமே அது நிறை வேறும்.
  • இக்கடமையை நிறைவேற்றுவதினால் கருணை இரக்கம் போன்ற பண்புகள் ஏற்படும். ஸகாத் வழங்கும் முஸ்லிமின் பண்பாடுகளையும், செல்வத்தையும் தூய்மைப்படுத்தும். ஏழை எளியோரின் உள்ளத்தில் திருப்தியை ஏற்படுத்தும்.மேலும் முஸ்லிம் சமூகத்திலுள்ள தனிநபர்களுக்கு மத்தியில் பாசம், சகோதரத்துவ தொடர்புகளை வலுப்படுத்தும்.
  • இக்கடமையை நிறைவேற்றுவதினால் கருணை இரக்கம் போன்ற பண்புகள் ஏற்படும். ஸகாத் வழங்கும் முஸ்லிமின் பண்பாடுகளையும், செல்வத்தையும் தூய்மைப்படுத்தும். ஏழை எளியோரின் உள்ளத்தில் திருப்தியை ஏற்படுத்தும்.மேலும் முஸ்லிம் சமூகத்திலுள்ள தனிநபர்களுக்கு மத்தியில் பாசம், சகோதரத்துவ தொடர்புகளை வலுப்படுத்தும்.
  • இதனால் உண்மையான முஸ்லிம் பிற மனிதர்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மனம் விரும்பி உளப்பூர்வமாக மகிழ்ச்சியோடு இக்கடமையை நிறைவேற்றுவான்.
  • செல்வங்களில் ஸகாத்தின் அளவு இரண்டரை வீதமாகும். அதாவது இலாப நோக்கத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி, பண நோட்டுக்கள், வியாபாரத்திற்காக தயார்படுத்தப்பட்ட வியாபாரப் பொருட்கள் ஆகியன இதில் அடங்கும். குறிப்பிட்ட இப்பொருட்களின் பெறுமதி குறிப்பிட்ட அளவை அடைந்து ,ஒரு வருடம் பூரணமாகி விட்டால் அவற்றில் ஸாகாத் கடமையாகி விடும்.
  • அவ்வாறே ஒருவர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையை சொந்தமாக கொண்டிருந்தால் அவற்றின் மீதும் ஸகாத் கடமையாகும். அத்தோடு அக்கால்நடைகளின் உரிமையாளர் அவைகளுக்கு செலவளித்து உணவு ஊட்டாது வருடத்தில் அதிக காலம் மேய்ச்சல் நிலங்களில் தானாக புற்பூண்டுகளை அவை உட்கொண்டிருத்தல் வேண்டும்.
  • அதே போன்று நிலத்திலிருந்து பெறப்படும் தானியங்கள், பழவகைகள், கனிப்பொருட்கள், புதையல் போன்றனவற்றிற்கும் குறிப்பிட்ட அளவை அவைகள் அடைந்தால் ஸகாத் கடமையாகி விடும்.

 

நான்காம் கடமை

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்

அல்லாஹ் கூறுகிறான்: {ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இறையச்சமுடையோராக மாற வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்ப்டடது போன்று உங்களின் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டிருக்கின்றது} [அல் பகரா:183].

  • ரமழான் மாதமானது ஹிஜ்ரி நாட்காட்டியின் படி ஒன்பதாம் (09) மாதமாகும். இது முஸ்லிம்களிடத்தில் ஒரு புனித மாதமாக உள்ளது. ஏனைய மாதங்களைவிடவும் இதற்கென்று தனித்துவமான ஒரு இடத்தை இது பெற்றுள்ளது. இம்மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.
  • ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது என்பது; புனித ரமழான் மாதம் முழுதும் ஒவ்வொரு நாளும் பஜ்ரின் (வைகறை) உதயம் முதல் சூரியன் மறையும் வரையில் உணவு, குடிபானம், தாம்பத்திய வாழ்வில்(உடலுறவில்) ஈடுபடுதல் போன்ற ஏனைய நோன்பை முறிக்கும் காரியங்களை தவிர்ந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதைக் குறிக்கும்.

 

ஐந்தாம் கடமை

அல்லாஹ்வின் புனித ஆலயத்தை(கஃபா) தரிசித்து ஹஜ் கிரிகையை நிறைவேற்றல்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {" மனிதர்களில் அங்கு (மக்கா) சென்று வர சக்திபெற்றவர் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்". எனக் கூறுகிறான்} [ஆல இம்ரான் 97].

  • ஹஜ் என்பது வசதிவாய்ப்பைப் பொற்றவர் மீது வாழ்நாளில் ஒரு முறை நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவதற்காக மக்காவிலுள்ள புனித ஆலயத்தையும், புனித தளங்களையும் நாடிச்செல்வதைக் குறிக்கும். இக்கடமையை நபி (ஸல்) அவர்களும், அவருக்கு முன்பிருந்த நபிமார்களும் நிறைவேற்றியுள்ளார்கள். அந்த வகையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மக்களை ஹஜ்ஜூக்கு அழைப்புவிடுக்குமாறு அல்லாஹ் பணித்துள்ளதை பின்வருமாறு அல் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான: {மேலும் ஹஜ்ஜூக்காக மனிதர்களுக்கு அழைப்பு விடுப்பீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களிலில் இருந்தெல்லாம் நடந்தவர்களாகவும், மெலிந்த ஒட்டகைகள் மீதும் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள்} [அல் ஹஜ் : 27].

 

(அர்கானுல் ஈமான்) ஈமானின் அடிப்படைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

நபியவர்களிடம் ஈமான் (நம்பிக்கை) குறித்து வினவப்பபட்ட போது பின்வருமாறு கூறினாரகள் : “ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனின் மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்பபடியே நடைபெறும் என்பதையும் விசுவாசம் கொள்வதாகும் என்று கூறினார்கள்.”

(அர்கானுல் ஈமான்) ஈமானின் அடிப்படைகள் என்பது, ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உறுதி கொள்ள வேண்டிய உள்ளம் சார்ந்த வணக்கங்களாகும். இவற்றை விசுவாசம் கொள்ளாதவரின் இஸ்லாம் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதனால் தான் ( அர்கானுல் ஈமான்) ஈமானின் அடிப்படைகள் என்ற பெயரால் இவைகள் அழைக்கப்படுகின்றன. எனவே (அர்கானுல் ஈமான்) ஈமானின் அடிப்படைகள், (அர்கானுல் இஸ்லாம்) இஸ்லாத்தின் அடிப்படைகள் இரண்டிற்குமிடையிலான வேறு பாடு யாதெனில், அர்கானுல் இஸ்லாம்; என்பது மனிதன் நிறைவேற்றும் வெளிப்படையான செயற்பாடுகளை குறிக்கும். இதற்கு உதாரணமாக ஷஹாதா கலிமாவை நாவினால் மொழிதல், தொழுகை நிறைவேற்றல், ஸகாத் கொடுத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அர்கானுல் ஈமான் என்பது; மனிதன் தனது உள்ளத்தால் நிறைவேற்றும் செயற்பாடுகளாகும். இதற்கு உதாரணமாக அல்லாஹ்வையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் விசுவாசிப்பதை குறிப்பிட முடியும்.

ஈமான் என்பதன் கருத்தும் பொருளும்:
அதாவது அல்லாஹ்வையும், அவனின் மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனின் தூதர்களையும், மறுமை நாளையும், நன்மை தீமை இறை விதியின்(களாகத்ர்) படியே நிகழும் என்பதையும் உள்ளத்தால் உறுதியாக நம்பி உண்மைப்படுத்துவதாகும். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்து விடயங்களையும் வாழ்வில் பின்பற்றி அதனை வார்த்தையாலும், செயலாலும் நடை முறைப்படுத்துவதாகும். ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற வார்த்தையை கூறுதல், அல்குஅனை ஓதுதல், ‘தஸ்பீஹ்’ ஸுப்ஹானல்லாஹ், ‘தஹ்லீல்’ லாஇலாஹ இல்லல்லாஹ் மற்றும் அல்லாஹ்வை புகழுதல் போன்ற விடயங்களே வார்த்தையால் செய்யும் செயற்பாடுகளாகும்.
தொழுகை, ஹஜ், நோன்பு போன்றன உறுப்புக்களால் செய்யும் அமல்களுக்கான சில உதாரணங்களாகும். மேலும் உள்ளத்தோடு தொடர்பான மறைவான உறுப்புகளின் செயற்பாடுகளைப் பொருத்தவரை; அல்லாஹ்வில் நேசம் கொண்டு அவனை பயப்படுதல், அவனின் மீதே நம்பிக்கை கொண்டு சார்ந்திருத்தல், அவனுடன் இதய சுத்தியோடு நடந்து கொள்ளுதல் போன்றவை மறைவான உறுப்புக்களின் செயற்பாடுகளுக்கான உதாரணங்களாகும்.
அகீதா துறைதுறை சார்ந்த அறிஞர்கள் ஈமானிற்கான வரைவிலக்கணத்தை பின்வருமாறு மிகச் சுருக்கமாக குறிப்பிடுவர்: ஈமான் என்பது உள்ளத்தால் நம்பி, நாவால் மொழிந்து, உறுப்புக்களால் செயலாற்றுவதாகும். அது (ஈமான்) நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கும். கெட்ட காரியங்கள் செய்வதன் மூலம் குறைந்து விடும்.

 

(அர்கானுல் ஈமான்) ஈமானின் அடிப்படைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

ஈமானின் முதல் அடிப்படை

அல்லாஹ்வை நம்புவதாகும்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே முஃமின்களாவார்கள்} [அந்நூர்: 62].

  • அல்லாஹ்வை ஈமான் கொள்வது என்பது, அவனது (ருபூபிய்யத்திலிலும்) படைத்து பரிபாலிக்கும் விடயத்திலும், (உலூஹிய்யத்திலும்) வணக்கவழிபாடுகளிலும், அவனின் திருநாமங்கள் பண்புகள் போன்றவற்றிலும் ஒருமைப்படுத்துவதையே குறிக்கிறது. அவை பின்வரும் விடயங்களை உள்ளடக்கியுள்ளது:

    •  அல்லாஹ்வின் உள்ளமையை (இருப்பை) ஏற்று விசுவாசித்தல்.

    •  அல்லாஹ்வின் 'ருபூபிய்யத்தை' விசுவாசித்தல் என்பது; அவனே எல்லாவற்றினதும் சொந்தக்காரன், எல்லாவற்றையும் படைத்து உணவளித்து காப்பவன் மற்றும் இப்பிரபஞ்சத்தின் விவகாரங்களை திட்டமிடுபவன் ஆகிய விடயங்களை நம்பிக்கை கொள்வதை குறிக்கிறது.

    •  அவனின் 'உலூஹிய்யத்தை' நம்புதல் என்பது; அவன் மாத்திரமே வணங்கவும் வழிபடவும் தகுதியானவன், என்றும் அவனுக்கு இணையாக இவ்விடயத்தில் எவருமில்லை என்று நம்புவதைக் குறிக்கும். அதாவது பிரார்த்தித்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடல், உதவியும், பாதுகாப்பும் கோரல் போன்ற வணக்கங்களும், ஏனைய வணக்கங்களும் அவனுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

    •  அவனுக்குரிய அழகிய திருநாமங்களையும், உயர் பண்புகளையும் ஈமான் கொள்வது என்பது; அல்லாஹ் தனக்கென இருப்பதாக உறுதிப்படுத்திய பெயர்களையும், பண்புளையும் அல்லது அவனின் தூதர்(ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாக உறுதிப்படுத்திய பெயர்களையும்,பண்புளையும் ஏற்று விசுவாசிப்பதும், அல்லாஹ்வும், அவனின் தூதரும் அவனுக்கு இல்லை என்று மறுத்த பெயர்களையும், பண்புகளையும் நிராகரித்து விடுவதுமாகும். மேலும் அவனின் திருநாமங்களும் உயர்பண்புகளும் பூரணத்துவமும் அழகும் நிறைந்தாக உள்ளன. இக்கருத்தையே அல்குர்ஆன் "அவனைப் போன்று எதுவுமில்லை அவன் நன்கு செவிமடுப்பவனாகவும் பார்ப்பவனாகவும் உள்ளான்" என்று குறிப்பிடுகிறது.

 

ஈமானின் இரண்டாவது அடிப்படை

மலக்குகளை ஈமான் கொள்வதாகும்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {வானங்களையும், பூமியைப் படைத்தவனும் இரண்டிரண்டு, மும்மூன்று, நன் நான்கு, இறக்கைகளுடைய வானவர்களை தூதர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். படைப்பில் தான் நாடுவதை அவன் மேலும் அதிகரிப்பான் அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்} [பாதிர்: 1].

  • மலக்குகள் மறைவான ஒர் படைப்பாகும். அவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்து அவனுக்கு பணிந்து கட்டுப்பட்டு நடப்பவர்களாக ஆக்கியுள்ளான் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
  • மேலும் அவர்கள் மிகவும் பிரமாண்டமான படைப்பாகும்.அவர்களின் வலிமை மற்றும் எண்ணிக்கை குறித்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பெயர்களும், பண்புகளும், பிரத்தியேகமான பணிகளும் உண்டு. அவர்களுள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வஹி(இறைக்கட்டளை) அறிவிப்பதற்கு பொறுப்பானவர். அவர் அல்லாஹ்விடமிருந்து வஹியை இறைத்தூதர்களுக்கு கொண்டு செல்பவராவார்.

 

ஈமானின் மூன்றாவது அடிப்படை

வேதங்களை ஈமான் கொள்வதாகும்

அல்லாஹ் கூறுகிறான்: {அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும் (இவர்களது) சந்ததிகளுக்கும் இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் மற்றும் ஏனைய நபிமார்களுக்கும் அவர்களது இரட்சகனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம், அவர்களில் எவருக்கிடையிலும் நாம் வேற்றுமை பாராட்டமாட்டோம் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்று நீங்களும் கூறுங்கள்} [அல்பகரா : 136].

  • வானுலக வேதங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தைகள் என மிக உறுதியாக நம்பி உண்மைப்படுத்துதல்.
  • அவ்வேதங்கள் தெளிவான உண்மையை உள்ளடக்கியதாக அல்லாஹ்விடமிருந்து தனது தூதர்களுக்கு இறக்கப்பட்டுள்ளது.
  • நபி முஹம்மத்(ஸல்) அவர்களை மனித இனம் முழுவதற்கும் நபியாக அனுப்பியதன் மூலம் அவர்கள் கொண்டு வந்த ஷரீஆ சட்டதிட்டங்களினால் முன்னய ஷரீஆ சட்டங்களை அல்லாஹ் மாற்றிவிட்டான்.
  • அல் குர்ஆனை ஏனைய எல்லா வேதங்களையும் விட மேலோங்கியதாகவும் அவ்தேங்களையும் மாற்றக்கூடியதாவும் ஆக்கியுள்ளான். அதே போன்று அல்குர்ஆனில் எவ்வித மாற்றமோ திரிபோ ஏற்படாதவாறு பாதுகாப்பதாகவும் பொறுப்பேற்றுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்: {நாம்தான் இந்தக் அல்குர்ஆனை இறக்கியுள்ளோம். மேலும் நாமே அதனை பாதுகாப்பவர்களாவோம்} [அல்ஹிஜ்ர் : 9].
  • ஏனெனில் அல்குர்ஆன் மனித குலத்திற்கான இறுதி வேதமாகவும், அவனின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித்தூதரகவும், இஸ்லாம் மார்க்கமே மறுமைவரை மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்றுக்கொண்ட மார்க்கமாக இருப்பதும்தான் இதற்கான காரணமாகும்: {நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாகும்} [ஆல இம்ரான் 19].

 

அல்லாஹ் தனது வேதமான அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ள வானுலக வேதங்களாவன:

 

  • 1 புனித அல் குர்ஆன்: நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்டது.
  • 2 தவ்ராத் வேதம்: நபி மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்டது.
  • 3 இன்ஜீல் வேதம்: நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்டது.
  • 4 ஸபூர் வேதம்: நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்டது.
  • 5 சுஹூபுகள்: நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்ட சுஹூபுகள் போன்றன முக்கியமானவையாகும்.

 

ஈமானின் நான்காவது அடிப்படை

இறைத்தூதர்களை நம்பு (ஈமான் கொள்)வதாகும்

அல்லாஹ் கூறுகிறான்: {மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், 'அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்,(அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அனைத்து) ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்} [அன்நஹ்ல் : 36].

  • அதாவது இணையில்லா அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்பதற்காகவும், அவனைத் தவிர வணங்கப்படுபவை அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்பதற்தகாகவும் அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை அனுப்பினான் என்பதை உறுதியாக நம்புதல் என்பதாகும்.
  • அவர்கள் யாவரும் மனிதர்களான ஆண்கள், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட அடியார்கள் என்றும் உண்மை பேசுபவர்கள் மற்றும் பிறரால் உண்மையாளர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள், (தக்வாவும்) இறைபக்தியும், நாணயமும்மிக்கவர்கள், நோர்வழிப்பெற்றோர் மற்றும் நேர்வழிகாட்டுவோர் என அத்துனைப் பண்புகளுக்கும் உரித்தான உத்தமர்கள். அவர்கள் கொண்டுவந்த தூதுச்செய்தியை உண்மைப்படுத்த அல்லாஹ் அற்புதங்களைக் கொண்டு அவர்களை பலப்படுத்தினான். மேலும் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட தூதுச்செய்தியை தங்களது சமூகத்திற்கு எத்திவைத்தது மாத்திரமின்றி அவர்கள் உண்மை மார்க்கத்திலும் நேர்வழியிலும் இருந்தனர்.
  • மார்க்கத்தின் அடிப்படை விடயமான அல்லாஹ்வுக்கு இணைவைக்காது வணக்க வழிபாடுகளில் அவனை ஒருமைப்படுத்தல் வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஆரம்ப தூதர் முதல் இறுதித்தூதர் வரை அவர்களின் அழைப்பு ஒன்றாக இருந்தது.

 

ஈமானின் ஐந்தாவது அடிப்படை

 மறுமை நாளை ஈமான் கொள்வதாகும்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக அவன்தான் மறுமை நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான் அதில் எவ்வித சந்தேகமுமில்லை. அல்லாஹ்வை விட வார்த்தையால் மிக உண்மையாளன் யார்?} [அந்நிஸா: 87].

  • மறுமை தொடர்பாக அல்லாஹ் தனது புனித வேதத்திலும், எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மறுமை பற்றி கூறியவைகள் அனைத்தையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளுதல். அதாவது மறுமை தொடர்பான விடயங்களான மனிதனின் மரணம், அவன் மீண்டும் மறுமையில் உயிர்கொடுத்து எழுப்பப்படுதல், விசாரணைக்காக ஒன்று திரட்டப்படுதல், நபிகளாரின் பரிந்துரை, நன்மை தீமை நிறுக்கப்படும் (மீஸான்)தராசு, இறை விசாரணை, சுவர்க்கம், நரகம் போன்ற விடயங்களும் இதனோடு தொடர்பான மற்றைய விடயங்களும் இதில் அடங்கும்.

 

ஈமானின் ஆறாவது அடிப்படை

நன்மை தீமை இறை விதியின் படியே நடக்கும் என்பதை நம்புதல்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய திட்டப்படியே படைத்திருக்கிறோம்} [அல் கமர் : 49].

  • இவ்வுலகில் உள்ள படைப்புகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் அறிவு, விதி மற்றும் அவனின் திட்டமிடலின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. இந்த விடயத்தில் அவன் தனித்தவன் அவனுக்கு நிகரானவர்கள் எவரும் கிடையாது. அத்துடன் ஒவ்வொரு பொருளின் விதியும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே எழுதிவைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மனிதனுக்கு நாட்ட சக்தியும், செயல் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. யதார்த்தத்தில் அவன்தான் தனது செயல்கள் அனைத்தையும் புரிகிறான் என்றாலும் அச்செயல்கள் அல்லாஹ்வின் அறிவிற்கும், அவனின் நாட்டத்திற்கும் அப்பால் செல்லமாட்டாது.

 

இறைவிதியை ஈமான் கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது:

 

  • 1 அல்லாஹ்விற்கு எல்லா விடயங்கள் குறித்த பரிபூரணமான ஆழமான அறிவு இருப்பதை ஈமான் கொள்ளுதல்.
  • 2 மறுமை நாள்வரையில் நிகழும் அனைத்து விடயங்களையும் அல்லாஹ் எழுதிவைத்துள்ளான் என்று நம்புவது.
  • 3 அல்லாஹ் நாடியவை அனைத்தும் நிச்சயம் நடந்தே தீரும். அவன் நாடாதவை என்றும் நடைபெறமாட்டாது எனும் அமுலாக்கப்படும் அவனின் நாட்டத்தையும் மற்றும் பூரண வல்லமையையும் நம்புவது (ஈமான் கொள்வது).
  • 4 அல்லாஹ்வே அனைத்து சிருஷ்டிகளினதும் கர்த்தா என்றும் அவனின் படைப்பில் எவரும் அவனுக்கு நிகராக இல்லை என்பதையும் நம்புதல் (ஈமான் கொள்வது).

வுழூவைப் (அங்கசுத்தி) பற்றி தெரிந்து கொள்வோம்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {நிச்சயமாக அல்லாஹ் பாவமன்னிப்புக்கோருவோரையும், சுத்தமாக இருப்போரையும் விரும்புகிறான்} [அல் பகரா : 222].

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் என்னுடைய இந்த வுழூவைப் போன்று வுழூச் செய்து, பின் ஏதும் கதைக்காமல் இரு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்".

தொழுகையின் மகிமைகளில் ஒன்று அத்தொழுகையை நிறைவேற்ற முன் அல்லாஹ் சுத்தத்தை வலியுறுத்தி, அத்தொழுகையை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாகவும் வைத்துள்ளான்.மேலும் சுத்தமானது தொழுகையின் திறவுகோளாகும்.அதன் சிறப்பை உளப்பூர்வமாக அறிவது தொழுகையை நிறைவேற்றுவதற்கான ஆவலை ஏற்படுத்தும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “சுத்தம் ஈமானின் பாதியாகும்.மேலும் தொழுகை ஒளியாகும்”.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “யார் தொழுகைக்காக வுழுசெய்து அதனை அழகான முறையில்செய்கிறாரோ அவரது பாவங்கள் உடலிருந்து வெளியேறிவிடுகின்றன”.
எனவே அடியான் வுழுவினால் தனது வெளிஉறுப்புக்களையும், வணக்கத்தினால் அவனின் ஆன்மாவையும் பரிசுத்தம் செய்து கொண்டவனாகவும், தூய்மையான எண்ணத்தைக் கொண்டவனாகவும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றியவனாவும் தனது இரட்சகனை முன்னோக்க வேண்டும்.

வுழு கட்டாயம் தேவைப்படும் விடயங்கள்:

  • 1 அனைத்து பர்ழான மற்றும் சுன்னத்தான தொழுகைகள்.
  • 2 கஃபாவை தவாப் செய்தல்.
  • 3 அல்குர்ஆனை தொடுதல்.

நாம் பரிசுத்தமான நீரினால் வுழு செய்து குளிப்போம்:
பரிசுத்தமான நீர் என்பது; மழை நீர், ஊற்று நீர் போன்றவற்றைக் குறிப்பதோடு அதன் இயற்கைத்தன்மையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாத, நீரின் தூய்மையை இழக்கச் செய்யும் சுவை, நிறம், மனம் போன்ற மூன்று பண்புகளிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாத நீரை குறிக்கும்.

 

வுழூவைப் (அங்கசுத்தி) பற்றி தெரிந்து கொள்வோம்

உள்ளத்தால் நிய்யத் வைத்தல்
உள்ளத்தால் நினைத்தல்) நிய்யத் உருவாகும் இடம் உள்ளமாகும், நிய்யத் என்பதன் பொருள் : அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் வணக்கத்தில் ஈடுபடுவதற்காக உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்.

முன்னங்கைகளை கழுவுதல்

வாய்க்கொப்பளித்தல்
வாய்க்கொப்பளித்தல் என்பது நீரை வாய்க்குள் செலுத்தி அதனை நன்கு அலசி வெளியேற்றுவதாகும்.

நாசிக்கு நீர்செலுத்தி சுத்தம் செய்தல்
(இஷ்தின்ஷாக்) என்பது: மூக்கின் கடைசிப்பகுதிவரை நீரை நன்கு மூச்சின் மூலம் உள்ளிலுத்தலை குறிக்கும்.
அதைத்தொடர்ந்து (அல் இஸ்தின்ஸார்) என்பது : மூக்கின் உள்ளே இருக்கும் சளி போன்றவற்றை மூக்கை நன்கு சீருவதன் மூலம் வெளியேற்றலை குறிக்கும்.

முகத்தைக் கழுவுதல்
முகத்தின் எல்லை:
முகம் என்பது ஒருவரை நேருக்கு நேர் சந்திக்கும் போது தென்படுகின்ற பகுதியாகும்.
அகலத்தால் முகத்தின் வரையரை (வலது) காது துவக்கம் (இடது) காது வரைலாகும்.
நீளத்தால் முகத்தின் வரையரை : தலையில் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழி வரையிலாகும்.
முகத்தைக் கழுவுதலானது; முகத்திலுள்ள மென்மையான முடி,பக்கவாட்டு முடி மற்றும் காதோடு ஒட்டி வளரும் அனைத்தையும் உள்ளடக்கும்.
“ அல் பயாழ்” என்பது காதுச் சோனை மற்றும் அதனுடன் ஒட்டிய பகுதியைக் குறிக்கும்.
“அல் இதார்” என்பது காதுத்துளையின் நேரெதிராக மேலெழுந்து நிற்கும் எலும்பின் மீது நேராக வளரும் பக்கவாட்டு முடியை குறிக்கும்.
அதே போன்று முகத்தை கழுவுவது தாடியின் அடர்ந்த முடியையும், கீழே தொங்கிக்கொண்டிருக்கும் பகுதியையும் உள்ளடக்கும் .

%MCEPASTEBIN%

இரு கைகளையும் கைவிரல் நுனிகளிலருந்து ஆரம்பித்து இரு முழங்கை வரையில் கழுவுதல்
கடமையான(பர்ழான) இரு கைகளையும் கழுவுவதில் இரு முழங்கைகளும் உள்ளடங்குகின்றன.

தலை முழுவதையும் இரண்டு காதுகளுடன் சேர்த்து இரு கைகளினால் ஒரு தடவை மஸ்ஹூ செய்தல் (தண்ணீரால் தடவுதல்)
தலையை மஸ்ஹு செய்யும் முறை: தலையின் ஆரம்பப் பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடரி வரைக்கும் இரு கைகளையும் கொண்டு சென்று, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே அவ்விரு கைகளையும் கொண்டு வருவதாகும்.
இரு ஆள்காட்டி விரல்களையும் இரு காதின் உற்பகுதிக்குள் செலுத்தி தடவ வேண்டும்.
இரு பெருவிரல்களினால் காதின் வெளிப்பகுதியை தண்ணீரால் தடவுதல் வேண்டும். இதன் மூலம் காதின் உள்புறம், வெளிப்புறம் இரண்டும் மஸ்ஹு செய்யப்படும்.

இரண்டு கால்விரல்களில் ஆரம்பித்து இரண்டு கால்களையும் கரண்டைக் கால்வரை கழுவுதல். கட்டாயம் கழுவப்பட வேண்டிய கால்களின் பகுதியில் இரண்டு கரண்டைக் கால்களும் உள்ளடங்கும்
கரண்டைக் கால் என்பது: கெண்டைக் காலின் கீழ்பகுதியில் தள்ளிக்காணப்டும் இரண்டு எலும்புகளுமாகும்.

வுழுவை முறிக்குகும் காரியங்கள்

  • 1 முன் பின் துவராரங்களிலிருந்து எதாவது வெளியாகுதல். இதில் சலம், மலம், இந்திரியம், இச்சை நீர் போன்றவை அடங்கும்.
  • 2
     ஆழ்ந்த உறக்கம், மயக்கம், போதை, பைத்தியம் போன்றவற்றால் சுய புத்தியை இழத்தல்.
  • 3 குளிப்பை கடமையாக்கும் காரியங்கள் அனைத்தும் இதில் அடங்கும். அதாவது மாதவிடாய், பிரசவ தீட்டு, பெருந்தொடக்கு போன்றன.

ஒரு மனிதன் இயற்கைத்தேவையை நிறைவேற்றினால் அதனை சுத்தமான நீரின் மூலமோ(இதுவே சிறந்தது) அல்லது நீர் அல்லாத நஜீஸை -அசுத்தத்தை - அகற்றும் கற்கள், தாள்கள்,புடவை போன்றவற்றால் சுத்தம் செய்வது அவசியமாகும். சுத்திகரிப்பதற்குப் பயன்படுத்தும் துடைப்பான்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும் அத்தோடு சுத்தம் செய்வதற்கு பயன்படும் பொருளானது தூய்மையான, அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருத்தல் வேண்டும்.

பாதணி மற்றும் காலுரை (சொக்ஸ்) மீது (மஸ்ஹ் செய்தல்) தண்ணீரால் தடவி விடுதல்

ஒருவர் பாதணிகளை அல்லது காலுரைகளை அணிந்திருந்தால் வுழுவின் போது இரு கால்களை கழுவாது அவற்றின் மீது பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றி மஸ்ஹ் செய்ய முடியும்:

  • 1 பெருந்துடக்கிலிருந்தும், சிறு துடக்திலிருந்தும் முழுமையாக தூய்மையாகிய நிலையிலும்,(வுழுவின் போது) கால்கள் இரண்டும் கழுவப்பட்ட நிலையிலும் அவைகள் அணியப்பட்டிருத்தல் வேண்டும்.
  • 2 அப்பாதணிகள் தூய்மையானதாக இருத்தல் வேண்டும்.
  • 3 மஸ்ஹ் செய்வது குறிப்பிடப்பட்ட காலப்பகுதிற்கு உற்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • 4 அப்பாதணிகள் அனுமதிக்கப்படட்ட(ஹலாலான) முறையில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். திருடப்பட்டதாகவோ, கொள்ளையடிக்கப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.

“ஹுப்” பாதணிகள் என்பது: பாதங்களை மறைக்கக்கூடிய மென்மையான தோலினால் செய்யப்பட்ட காலணியைக் குறிக்கும்.
“ஜவ்ரப்” என்பது காலில் அணிவதற்கு துணி போன்றவற்றால் செய்யப்பட்ட காலுரையாகும்.தற்போது “அஷ்ஷுர்ராப் என்ற பெயரால் இது அழைக்கபடுகிறது.

பாதணி மற்றும் காலுரை (சொக்ஸ்) மீது (மஸ்ஹ் செய்தல்) தண்ணீரால் தடவி விடுதல்

ஹுப்பின் (காலணி) மீது மஸ்ஹ் செய்வதனை மார்க்கம் அனுமதித்ததன் நோக்கம்:
ஹுப்பின் மீது மஸ்ஹ் செய்வதன் பிரதான நோக்கம் முஸ்லிம்களுக்கு இலகுபடுத்தி, சிரமங்களை குறைப்பதாகும்.ஏனெனில், குறிப்பாக மாரி மற்றும் கடும்குளிர் காலங்களிலும், பயணத்தின் போதும் காலணிகள், காலுறைகள் போனற்வற்றை கழற்றுவதும், கால்களைக் கழுவுவதும் சிரமம் என்பதினால் இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

%MCEPASTEBIN%

மஸ்ஹ் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காலம்:

ஊர்வாசிக்கு: ஒரு நாள் ( 24 மணித்தியாளங்கள்).

பிரயாணிக்கு :மூன்று தினங்கள் (72 மணித்தியாளங்கள்).

வுழு செய்து பாதணிகளை அல்லது காலுரைகளை அணிந்ததன் பின் துடக்கு ஏற்பட்டு வுழு செய்யும் போது பாதணிகள் மீது அல்லது காலுரைகள் மீதும் எப்போது முதலாவதாக தண்ணீரால் தடவுகிறாரோ அப்போதிலிருந்தே மஸ்ஹ் செய்வதற்கான காலம் ஆரம்பமாகிறது.

பாதணி அல்லது காலுரையின் மீது மஸ்ஹ் செய்யும் முறை:

  • 1 இரு கைகளையும் நீரினால் நனைத்துக் கொள்ளல்.
  • 2 பாதத்தின் மேல்புறமாக விரல்களின் நுணியில் ஆரம்பித்தது கெண்டைக்காலின் ஆரம்பம்வரையில் கையால் தடவுதல்.
  • 3 வலது காலை வலது கையினாலும், இடது காலை இடது கையினாலும் தடவுதல்.

மஸ்ஹை முறிக்கும் காரியங்கள்:

  • 1 குளிப்பை கடமையாக்கும் அனைத்து காரியங்களும் இதில் அடங்கும்.
  • 2 மஸ்ஹின் காலம் முடிவடைதல்.
  •    

குளிப்பு

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவதினாலும், விழிப்பு அல்லது உறக்க நிலையில் இச்சையினால் இந்திரியம் வெளிப்படுவதினாலும் குளிப்பு கடமையாகிறது. இக்குளிப்பானது தொழுகையை நிறைவேற்றவும் அல்லது சுத்தம் கட்டாயம் தேவைப்படும் கடமைகளை நிறைவேற்றவும் அவசியமான விடயமாகும். அதே போன்று ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் அல்லது பிரசவ தீட்டு ஏற்பட்டால் அவள் அதிலிருந்து விடுபட்டபின் தொழுவதற்கும் அல்லது சுத்தம் கட்டாயம் தேவைப்படும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் குளிப்பு கடமையாகிறது.

குளிப்பு

குளிக்கும் முறை பின்வருமாறு :
ஒரு முஸ்லிம் தனது உடல் முழுவதும் நீரை ஊற்றி - வாய்க் கொப்பளித்தல், நாசிக்கு நீர்செலுத்துததுதல் உட்பட - கழுவிக் கொள்ளவேண்டும். அவ்வாறு உடல் முழுவைதையும் நீரால் கழுவிக் கொள்ளும் போது பெருந்துடக்கு நீங்கி அவர் சுத்தமாகி விடுகிறார்.

குளிப்பு கடமையானவர்களுக்கு அவர்கள் குளித்து சுத்தமாகும் வரையில் பின்வரும் காரியங்களை செய்வது தடுக்கப்பட்டுள்ளது:

  • 1 தொழுகை.
  • 2 கஃபாவை தவாப் செயதல்.
  • 3 பள்ளியில் தங்குதல், எனினும் பள்ளியினுள்ளே தரிக்காது அதனை கடந்து செல்வது அனுமதிக்கப்பட்டதாகும்.
  • 4 அல்குர்ஆனை தொடுதல்.
  • 5 அல் குர்ஆன் ஓதுதல்.

தயம்மும்

சுத்தம் செய்வதற்கான தண்ணீர் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கவில்லையாயின் அல்லது நோயின் காரணமாக அவருக்கு நீரை பயன்படுத்துவது சிரமமானதாக அமைந்தால் அல்லது (நீர் கிடைக்காது நீரைத் தேடும்போது) தொழுகையின் நேரம் தவறிவிடும் என்று பயந்தால் அவருக்கு மண்ணைப் பயன்படுத்தி தயம்மும் செய்து கொள்ள முடியும்.

தயம்மும்

அதன் முறையாவது தனது இரு கரங்களாலும் மணலில் ஒரு தடவை அடித்துவிட்டு, முகத்தையும், மணிக்கட்டு வரை இரு கரங்களையும் தடவிக் கொள்ள வேண்டும். அம்மணல் சுத்தமாக இருப்பது நிபந்தனையாகும்.

பின்வரும் காரியங்கள் தயம்முமை முறித்துவிடும்:

  • 1 வுழுவை முறிக்கும் காரியங்கள் அனைத்தும் தயம்முமை முறித்து விடும்.
  • 2 தயம்மும் செய்து குறித்த வணக்கத்தை நிறைவேற்ற ஆரம்பிக்க முன் தண்ணீர் கிடைத்தால் அல்லது பயன்படுத்த முடியுமாக இருந்தால் தயம்மும் முறிந்து விடும்.

தொழுகையைப் பற்றி அறிந்து கொள்வோம்

தொழுகைக்குத் தயாராவோம்

  • தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் ஒரு முஸ்லிம் பெருந்துடக்கு ஏற்பட்டவராக இருந்தால் அவர் பெருந்தொடக்கிலிருந்தும், சிறு துடக்கிலிருந்தும் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெருந்துடக்கு: முஸ்லிமின் மீது குளிப்பைக் கடமையாக்குபவை யாவும் பெருந்துடக்காகும்.
சிறு துடக்கு: முஸ்லிமின் மீது வுழுவை கடமையாக்குபவை யாவும் சிறு துடக்காகும்.

  • ஒரு முஸ்லிம் தூய்மையான ஆடைகளுடன், தூய்மையான இடத்தில், தனது உடலில் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதியை (அவ்ரத்தை) மறைத்தவராக தொழவேண்டும்.
  • ஒரு முஸ்லிம் தொழும் நேரத்தில் பொருத்தமான ஆடைகளினால் அலங்கரித்து, அவற்றினால் தனது உடலை மறைத்துக் கொள்வான். தொழுகையின் போது தொழுபவர் ஆணாக இருந்தால் தொப்புளுக்கும் முழங்காலுக்குக் இடைப்பட்ட பகுதியை வெளிப்படுத்துவது தடுக்கப்பட்ட விடயமாகும்.
  • தொழுகையில் ஒரு பெண் தனது முகத்தையும், இரு முன்னங்கைகளையும் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளையும் மறைப்பது கடமையாகும்.
  • ஒரு முஸ்லிம் தொழுகையின் போது தொழுகைக்குரிய வார்த்தைகள் தவிர வேறு வார்த்தைகளை பேச மாட்டார். இமாமைப் பின்பற்றி அவருக்கு கட்டுப்படுவார். தொழுகையின் போது திரும்பிப் பார்க்க மாட்டார். தொழுகையோடு தொடர்பான வார்த்தைகள்(ஓதல்களை) மனனமிடுவதற்கு இயலாதவராக இருந்தால் தொழுகை முடியும் வரையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து மகிமைப்படுத்துவார். அதாவது (திக்ர், தஸ்பிஹ்களை கூறுவார்) இவ்வாறு தொழுகை தொடர்பான விடயங்களை அறியாதோர் தொழுகைகுறித்தும், அதில் ஒதுபவை குறித்தும் அவசரமாக கற்றுக்கொள்வது அவசியமாகும்.

தொழுகையைப் பற்றி அறிந்து கொள்வோம்

நிறைவேற்ற விரும்புகின்ற தொழுகையை நிறைவேற்றுதற்கான எண்ணத்தை மனதில் கொள்வோம், நிய்யத் இடம்பெற வேண்டிய இடம் உள்ளமாகும்.
நாம் வுழு செய்ததன் பின் கிப்லாவை முன்னோக்கி, நின்று தொழுவதற்கான சக்தியைப் பெற்றிருப்பின் நின்று தொழுவோம்.

தொழுகையினுள் பிரவேசிக்கிறோம் என்ற எண்ணத்துடன் எமது இரு கைகளையும் தோள் புயங்களுக்கு நேராக உயர்த்தி ‘அல்லாஹு அக்பர் ‘ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று தக்பீர் கூறுவோம்.

தொழுகையின் ஆரம்பத்தில் ஒதக் கூடிய துஆக்களில் ஒன்றை ஓதிக்கொள்வோம். அவ்வாறான துஆக்களில் ஒன்றுதான்:
(ஸுப்ஹானக ல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கய்ருக) என்பதாகும். பொருள் (உனக்கு தகுதியற்ற எல்லாக் குறைகளிலிருந்தும்) உன்னை நான் துதிக்கிறேன். உனது புகழைக்கொண்டு உன்னை போற்றியவனாகவே உள்ளேன். உனது பெயர் அருட்பேறு நிறைந்தாக உள்ளது. உன்னுடைய கண்ணியமும் மகத்துவமும் மேலோங்கிவிட்டது. உன்னையன்றி உண்மையாக வணங்கப்படுபவன் (வேறு எவரும், எதுவும்) இல்லை.

ஷைத்தானிடமிருந்து பாதுகாவால் தேடுவதற்காக - அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்- எனக் கூறுவோம்: “விரட்டப்பட் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”.

ஐந்தாம் கட்டமாக ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவை ஒதுவோம்: {(பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன் (1) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்) அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்(2) அர்ரஹ்மானிர் ரஹீம்). அவன் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாவான் (3) (மாலிகி யவ்முத்தீன்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே) (4) (இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் (5) (இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்). நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (6) (ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலழ் ழால்லீன்). (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ,வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல. (7)} ஸூரத்துல் பாத்திஹாவை ஓதியதன் பின் முதலாம் இரண்டாம் ரக்அத்துக்களில் மாத்திரம் அல் குர்ஆனில் முடியுமான வேறு சூராக்களை அல்லது வசனங்களை ஒதிக் கொள்வோம். அவ்வாறு ஸூரத்துல் பாத்திஹாவைத் தொடர்ந்து இன்னொரு ஸூரா ஓதுவது கடமையல்ல என்றாலும் அவ்வாறு செய்வதில் மகத்தான கூலி உண்டு.

ஆறாவது கட்டமாக; (அல்லாஹூஅக்பர்) எனக் கூறியவர்களாக எமது முதுகுகளை சமமாக வலைத்து எமது இரு கைகளையும் முட்டின் மீது விரல்களை விரித்த நிலையில் வைத்தோராக ருகூஃ செய்வோம் அதில் நாம் (ஸுப்ஹான ரப்பியல் அழீம்) எனக் கூறுவோம்.

எமது இரு கைகளையும் தோள் புய ங்களுக்கு நேராக உயர்த்தியர்த்தியவர்களாக, (ஸமிஅல்லாஹூலிமன் ஹமிதா) என்று கூறியவர்களாக ருகூவிலிருந்து நிலைக்கு வரவேண்டும். அதன் போது எமது உடல் நேராக வந்த பின் நின்றவர்களாக (ரப்பனா வலகல் ஹம்த்) என்று கூறுவோம்.

( அல்லாஹு அக்பர்) எனக் கூறி இரு கைககள்,முழங்கால்கள் மற்றும் இரு பாதங்கள் உட்பட நெற்றி மற்றும் மூக்கு போன்ற உறுப்புகள் தரையில் படும் நிலையில் ஸுஜூத் செய்வோம் ஸஜ்தாவின் போது (ஸுப்ஹான ரப்பியல் அஃலா ) என்று கூறுவோம்.

ஸஜ்தாவிலிருந்து (அல்லாஹு அக்பர்) எனக் கூறி எழுந்து முதுகை நேராக வைத்து வலது காலை நட்டியவர்களாக இடது காலில் உட்கார்ந்து (ரப்பிஃபிர்லி) எனக் கூறுவோம்.

(அல்லாஹு அக்பர்) எனக்கூறி முதல் ஸஜ்தா செய்தது போன்று மீண்டும் ஒரு முறை ஸஜ்தா செய்வோம்.

இரண்டாவது ஸஜ்தாவை தொடர்ந்து (அல்லாஹு அக்பர்) எனக் கூறியவர்களாக மீண்டும் இரண்டாவது ரக்அத்திற்காக எழுந்து நிற்போம். முதலாவது ரக்அத்தில் செய்தது போன்று எஞ்சிய ரக்அத்துக்களையும் தொழுவோம்.

லுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளில் இரண்டாவது ரக்அத்தின் பின் முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) ஓதுவதற்காக அமர்வோம். முதலாவது தஷஹ்ஹுத் பின்வருமாறு: (அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு). "சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும், அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்". அதனைத் தொடர்ந்து மூன்றாம் ரக்அத்திற்காக எழுந்து நிற்போம்.

ஒவ்வொரு தொழுகையின் இறுதி ரக்அத்தின் பின் இறுதி தஷஹ்ஹுதிற்காக அமர்வோம்.அது பின்வருமாறு: (அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது, அஸ்ஸலாமு அலைக அய்யுஹந் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ, அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலாஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலாஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலாஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்). "காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும், அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்,   யாக நம்புகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களின் மீதும் இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களின் மீதும் இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய்" என்று தஷஹ்ஹுத் ஓத வேண்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதி

 தொழுகையை முடித்துக் கொள்வதை மனதில் எண்ணியவர்களாக வலது பக்கமாகத் திரும்பி (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ) எனக் கூறி இடப்பக்கமும் எமது முகங்களைத்திருப்பி (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்) என ஸலாம் கூறி தொழுகையை முடிப்போம். இவ்வாறு செய்வதனால் தொழுகையை நிறைவேற்றியவர்களாவோம்.

முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப் (முகத்திரை)

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {"நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்".எனக் கூறுகிறான்} [அல் அஹ்ஸாப்: 59].

அல்லாஹ் முஸ்லிம் பெண்களுக்கு அவர்களின் நாடுகளில் வழமையாக அணியும் ஆடைகள் மூலம் அண்ணிய ஆண்களிடமிருந்து தமது உடல் முழுவதையும் மறைத்துக்கொள்வதை கடமையாக்கியுள்ளான். ஒரு பெண் ஹிஜாபை தனது கணவன் மற்றும் திருமணம் முடிப்பதற்கு நிரந்தரமாக தடைசெய்யப்பட்டோர்(மஹ்ரம்கள்) முன்னிலையில் மாத்திரமே கழட்டுவதற்கு அனுமதியுள்ளது.நிரந்தரமாக திருமணம் முடிப்பதற்கு தடை செய்யப்பட்டோர் விபரம் பின்வருமாறு: தந்தை, தந்தையின் தந்தை, பாட்டன், மகன், மகனின் மகன், தந்தையின் சகோதரர்கள், தாயின் சகோதரர்கள், சகோதரன், சகோதரனின் மகன், சகோதரியின் மகன், தாயின் கணவன் - அவளுடன் அவர் உறவு கொண்டிருந்தால் - , கணவரின் தந்தை, பாட்டன், கணவனின் மகன், பேரன், மகளின் கணவன். இரத்த உறவின் மூலம் மஹ்ரமாக ஆகுவோர் அனைவரும் பால்குடி உறவின் மூலமாகவும் மஹ்ரமாகி விடுவர்.

ஒரு முஸ்லிம் பெண் தனது ஆடையில் பின்வரும் விதிகளையும்,வரையறைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும்:

  • 1 அவளின் ஆடை முழு உடலையும் மறைப்பதாக இருக்க வேண்டும்.
  • 2 அவள் அணியும் ஆடை அலங்காரம் நிறைந்ததாக இருத்தல் கூடாது.ക.
  • 3 தனது மேணியை தெளிவாக காட்டக்கூடிய மெல்லிய ஆடையாக இருத்தல் கூடாது.
  • 4 அவளின் உடலின் அமைப்பை வெளிக்காட்டும் இறுக்கமான ஆடை அல்லாமல் தளர்வானதாக இருத்தல் வேண்டும்.
  • 5 வாசனைத்திரவியம் பூசப்பட்டதாக இருத்தல் கூடாது.
  • 6 ஆணின் ஆடையை ஒத்ததாக இருக்கக் கூடாது.
  • 7 மாற்று மதப்பெண்கள் தங்களது வணக்கவழிபாடுகளிலும், பெருநாட்களிலும் அணியும் ஆடைகளை ஒத்ததாக இருக்கக் கூடாது.

முஃமினின் (இறைவிசுவாயின்) சில பண்புகள்

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்} [அல் அன்பால் :2].

முஃமினின் (இறைவிசுவாயின்) சில பண்புகள்

  • ஒரு இறைவிசுவாசி தனது பேச்சில் உண்மையாளராகவும், பொய் பேசாதவராகவும் இருப்பார்.
  • உடன்படிக்கையையும், வாக்கையும் நிறைவேற்றுவார்.
  • சண்டை சச்சரவின் போது உண்மைக்கு மாற்றமாக நடந்து கொள்ளமாட்டார்.
  • அமானிதத்தை நிறைவேற்றுவார்.
  • தனக்கு விரும்புவதையே தனது சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவார்.
  • தயாள குணமுடையவராக இருப்பார்.
  • மக்களுக்கு உபகாரம் செய்வார்.
  • குடும்ப உறவுகளை சேர்ந்து நடப்பார்.
  • செல்வ நிலையில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, கஷ்டமான நிலையில் பொறுமை காத்து அல்லாஹ்வின் விதியை திருப்தியோடு ஏற்பார்.
  • வெட்கம் எனும் பண்பை பெற்றிருப்பார்.
  • படைப்புகளுக்கு இரக்கம் காட்டுவார். ( இதர படைப்பினங்களுடன் அன்பாக நடந்து கொள்வார்).
  • அவரின் உள்ளம் காழ்ப்புனர்விலிருந்து விடுபட்டு தூய்மையானதாகவும்,மற்றவர்களுக்கு எதிராக அத்துமீறி நடப்பதிலிருந்து அவரது உறுப்புக்கள் பாதுகாகப்பனாதாகவும் இருக்கும்.
  • மனிதர்களின் தவறுகளை மன்னிப்பார்.
  • வட்டி சாப்பிட மாட்டார். அதனுடனான செயற்பாடுகளில் ஈடுபடவும் மாட்டார்.
  • விபச்சாரம் செய்ய மாட்டார்.
  • மது அருந்த மாட்டார்.
  • தனது அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்வதுடன் அவர்களுக்கு உபகராம் செய்வார்.
  • பிறருக்கு அணியாயம் மற்றும் துரோகம் இழைக்காது நடந்துகொள்வார்.
  • திருடமாட்டார், சூழ்ச்சி செய்யவும் மாட்டார்.
  • தமது பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வார். அவரகள் முஸ்லிம் அல்லாதவராயினும் நல்ல விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்.

எனது சுபீட்சமும், மகிழ்ச்சியும் எனது மார்க்கமான இஸ்லாத்தில்தான் உள்ளது

இது குறித்து பின்வருமாறு தனது அருள்மறையில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்: {ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்} [அந்நஹ்லு : 97].

மேலும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நினைவு கூறும் போதும், அல்குர்ஆனை ஓதும் போதும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுடனான தொடர்பு அதிகரிக்கிறது. அவனது ஆன்மா பரிசுத்தமடை மடைந்து, அவனின் இறைநம்பிக்கை உறுதி பெறுகிறது.
அதே போல் அல்லாஹ்வை மிகத் தெளிவாக அறிந்து வணங்குவதற்கு ஒரு முஸ்லிம் தனது மார்க்க விடயங்களை சரியான மூலதார நூற்களிலிருந்து கற்றுக்கொள்வது அவசியமாகும். நபியவர்கள் இது குறித்து பின்வருமாறு கூறினார்கள்: “கல்வியைத் தேடிப் படிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்”.

மேலும் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை அல்லாஹ்வின் கட்டளைகளில் உள்ள தத்துவங்கள் பற்றி அறிந்தாலும்,அறியாது விட்டாலும் அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவராக இருத்தல் வேண்டும்: {அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விடயத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவ்விடயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்} [அல் அஹ்ஸாப் : 36].
எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் தோழர்கள் அனைவர் மீதிலும் அல்லாஹ்வின் ஸலாத்தும், ஸலாமும் உண்டாவதாக!.